தூத்துக்குடிக்கு நீதி கோரி…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களை தொடர் அச்சுறுத்தல், தொந்தரவு செய்தல் மற்றும் கைது செய்வதன் மூலம் ஒடுக்கிவருகிறது காவல் துறை.

சுற்றுச் சூழல் மற்றும் உடல்நலனுக்கு  தீங்கு ஏற்படுத்திவரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 99 நாட்களாகப் போராடி வந்தனர்.

போராட்டத்தின் 100 வது நாளான கடந்த மே 22-ஆம் தேதி, மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டனர். மக்கள் திரளைக் கட்டுப்படுத்த  முயன்ற காவல்துறையினர், ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் மீது அதிகப்படியான படைப்பிரயோகத்தை நடத்தியதோடு  கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் 13  அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமும் அடைந்தனர்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகள் உட்பட பலர் காவல் துறையினரின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு இன்றளவும் உள்ளாகி வருகின்றனர்  என்று சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆறு நபர்களை கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் ஒரு வருடத்திற்கு எந்த வழக்கு விசாரணையுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்படுவர். இதன் மூலம் தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையும் மறுக்கப்படும்.

காவல் துறையினரின் தொடர் அச்சுறுத்தல்களுக்கும், வன்முறைக்கும் தினம் தினம் பயந்து வாழ்வதாகத் தூத்துக்குடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் தொடர்ந்து இச்செயல்களில் ஈடுபடும் காவல் துறையினர் மீது எவ்விதமான விசாரணையும் செய்ய தமிழக அரசு உத்தரவிடவில்லை.

எனவே

நீதி மற்றும் பதில் சொல்லும் கடப்பாட்டை உறுதி செய்ய

நீங்களும் இணைவீர்!

இப்போதே இக்கோரிக்கை மனுவில் கையெழுத்திடுவீர்!

தமிழக முதலமைச்சரும் மற்றும் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் நாம் கோருவது…

  • தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் நிர்வாகத் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நிர்வாகத் தடுப்புக் காவல் ரத்து செய்யப்படவேண்டும்.
  • காவல் துறையினரின் தொடர் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் குறித்தப் புகார்கள் மீது உடனடியாக நடுநிலையான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • 2018 மே 22-ம் தேதி நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விரிவான நடுநிலையான திறன்வாய்ந்த விசாரணைக்கு உத்தரவிட்டு, அதிப்படியான படைப்பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதிசெய்திட வேண்டும்.
  • மாவட்ட ஆட்சியரால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவு ஆணையின் நகலை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.