காவல் சித்திரவதை மரணங்களில் தொடர்புடைய அதிகாரிகளை தொடர்ந்து காப்பாற்றி வருவதை தமிழக அரசு நிறுத்திட வேண்டும்

Amnesty International India
Bangalore / New Delhi: 1 July 2020 4:23 pm

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கோவிட்-19 ஊரடங்கு விதியை மீறி கூடுதல் நேரம்  கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கென  அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டப்பட்டதாகத் தெரிகின்றது. அதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும், அடுத்தடுத்து ஜீன் 22 ஆம் தேதி இரவு பென்னிக்ஸீம், 23 ஆம் தேதி காலை ஜெயராஜீம்  மரணமடைந்துள்ளனர்.

இந் நிகழ்வு குறித்துக் கருத்து வெளியிட்ட திரு.  அவிநாஸ் குமார்,  செயல் இயக்குநர் அம்னெஸ்டி இன்டர்நே~னல் கூறியது: “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது   மரணங்கள், காவல் துறையினரைப் பொறுப்புடைமை (accountability) உள்ளோராக வைத்திருப்பதில் இந்தியா தொடர்ந்து தவறி வருவதையே சுட்டி நிற்கின்றது. தடுப்புக் காவல் சித்ரவதைகள் மற்றும் மரணங்கள் தொடர்பான வழக்குகளில், தண்டனை விகிதம் மிகக் குறைவாக இருப்பது, காவல்துறையினரின் சட்ட விரோதச் செயல்களுக்கு ஏதுவான சூழலை அமைத்துக் கொடுப்பதாகவும், அவர்களது அசட்டுத் துணிச்சலுக்க வழிவகுப்பதாகவும்  இருக்கின்றது.  இப்போக்கு, உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டு  தரவுகளின்படி, தடுப்புக் காவல் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

ஆனாலும்,  இதுவரை ஒரு காவல் துறை அதிகாரி கூட தமிழகத்தில் கைது செய்யப்பட்டதில்லை. தமிழக அரசு, இனியும் தனது காவல்துறை அதிகாரிகளால் நிகழ்த்தபட்டு வரும் சித்திரவரைகளைக்  கண்டும் காணாமல் இருத்தல் கூடாது.  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவல் துறையினரைச் சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம், இது போன்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். சித்திரவதை மற்றும் அது தொடர்பான வன்கொடுமைகள் சர்வதேச சட்டத்திற்குப் புறம்பானவை என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு சர்வதேச சட்டங்களால் நிலைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இந்திய அவற்றை இந்திய தண்டைனைச் சட்டப்படி, ஒரு தனிப்பட்ட குற்றமாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. இருப்பினும், நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புக்கள், சித்திரவதைகள் அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிமனிதச்  சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கின்ற காரணத்தால், அவற்றைத் தடுப்பது அரசின் கடமை என்று வலியுறுத்தியுள்ளன.

பின்னணித் தகவல்:

‘தி பிரின்ட்’ என்ற செய்தி இணையத்தளத்தின் அறிக்கையின்படி

கடந்த இருபதாண்டுகளில் – அதாவது 1997 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், இந்தியா முழுவதிலும் 790 தடுப்புக் காவல் மரணங்கள் குறித்த தரவுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 385 காவல் துறையினர் மீது குற்ற பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 120 வழக்குகள், நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. மொத்த வழக்குகளில் எட்டு காவல் துறையினர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

‘சித்திரவதை மற்றும் கொடூர, மனிதத் தன்மையற்ற, இழிவான வன்கொடுமைகளுக்கெதிரான’ ஐ.நாவின் உடன்படிக்கையில் இந்தியா 1997 ஆம் ஆண்டு கையெழுத்திட்டது.  இருப்பினும், அவ்வுடன்படிக்கை, இந்தியாவினால்  அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்திடும் நோக்கில், இதுவரை சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு பொதுமக்களிடம்  விவாதமோ கலந்துரையாடலோ ஏதுமின்றி, அவசரகதியில் ‘சித்திரவதை தடுப்பு சட்ட முன் வரைவு’ (Prevention of Torture Bill) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வரைவு பல்வேறு குறைகளுடனும், சித்ரவதைக்கெதிரான ஐ.நா உடன்படிக்கையின் பல முக்கிய அம்சங்களை நிறைவு செய்யாமலும் இருந்தது. 2014ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சி முடிவுக்கு வந்ததோடு இச்சட்ட முன்வரைவும் காலாவதியாகிவிட்டது.

For more information please contact:

Email: [email protected]