“எங்கள் பாதுகாப்பு, எங்கள் உரிமை” – குழந்தைகளின் கோரிக்கை

Amnesty International India
Bengaluru/ New Delhi: 19 July 2019 5:14 pm

ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள், அரசு ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வழியில் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பள்ளி இடை நிற்றலுக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல்  இந்தியாவின்நம் பாதுகாப்பு, நமது உரிமைபரப்புரையின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தின் வாயிலாக விளிம்பு நிலைச் சமூகங்களைச் சார்ந்த குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகளைக் கொள்கை வகுப்போருக்கும், அரசுக்கும் முன் வைக்கின்றனர். இப்பிரச்சாரத்தின் வாயிலாக அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் இந்தியா தமிழகத்தில் சமூக கல்வி நிறுவனத்துடன் இணைந்து எட்டு மாவட்டங்களில் 21 பள்ளிகளில் 739 குழந்தைகளிடம் பாதுகாப்பு குறித்த அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்தது.

இப்பரப்புரையில் அரசுப் பள்ளிகள் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளிலிருந்து 12-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அதில் 70 விழுக்காட்டிற்கு அதிகமான குழந்தைகள் பட்டியல் இன மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள். மேலும், 30 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு செய்ய வேண்டியது  என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த குழந்தைகள் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். குழந்தைகள் முன் வைக்கும் இக்கோரிக்கைகள் பல கல்வி உரிமைச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட குழந்தைகள்  உரிமைகள் ஆகும். ஆனால் அவ்வுரிமைகள் எவற்றையும் நாங்கள் அனுபவிக்கவில்லை என்ற தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். இது சட்டங்கள் முறையாக நடைமுறைபடுத்தபடவில்லை என்பதைக் காட்டுகிறது. குழந்தைகளை மையமாகக் கொண்ட இப்பரப்புரை குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துல், பிரச்சனைகளை அச்சமின்றி பேச அவர்களை வளப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் இந்தியா அமைப்பின் மனித உரிமைக் கல்வி மேலாளர் ராஜகுமாரி கூறும்போது, “பாதுகாப்பற்ற பள்ளிப் பயணம், மோசமான அகக்கட்டமைப்பு, குழந்தைகள் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளுவதற்குரிய வெளி இல்லாமை, மற்றும் வசிப்பிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளைக் குழந்தைகள் முன் வைக்கின்றனர். இது குறித்த அச்சம் பல நேரங்களில் பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவதற்கும், குழந்தைத் திருமணத்தில் தள்ளப்படுவதற்கும் காரணமாக அமைகிறதுஎன்றார்.

சரியான கழிப்பிட வசதியின்மை, சுற்றுச் சுவர் இல்லாமை மற்றும் பள்ளிகளுக்கு பாதுகாவலர் இல்லாமை போன்ற பொதுவான பிரச்சனைகளைக் குழந்தைகள் பிரதிபலிக்கின்றனர். உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி படிக்கின்ற பிரபா* (*பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி கூறும் போதுஎங்கள் பள்ளியில் காம்பௌன்ட் சுவர் இல்லை. இரவு நேரத்தில் பாத் ரூம் போக வேண்டுமானால் தனியாகப் போக முடியாது. நடு இரவில் ஆண்கள் சத்தம போடுவதும் எங்கள் கட்டிடத்தில் கல் எறிவதும் கேட்கும். இது தவிர தண்ணீர் எடுக்க ஊருக்குள் செல்லும் போது ஆண்கள் கிண்டல் செய்வார்கள்.” என்றார்.

மேலும், அதிகப்படியான பெண் குழந்தைகள் மற்றும் சில ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறத்தல்களே அவர்கள், ஒவ்வொரு நாளும் சந்திக்கும் கசப்பான அனுபவம் எனப் பகிர்ந்து கொண்டனர்.

பாதுகாப்பற்றவையாக இருப்பது பள்ளிகள் மட்டுமல்ல. மாறாக அவர்களின் வீடுகளிலும், கிராமங்களிலும் அதே நிலை நீடிப்பதாக் குழந்தைகள் கூறுகின்றனர். மேலும், பாதுகாப்பற்ற காட்டு வழிப் பயணம், பள்ளி நேரத்திற்கு வராத பேருந்துகள், நீண்ட நெடிய நடை பயணம், பல ஊர்களைக் கடந்து செல்லும் போது ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் என தொடரும் குழந்தைகளின் பிரச்சினைகள் அன்றாட பள்ளி பயணத்தை மிகக் கடினமான ஒன்றாக மாற்றி விடுகிறது.

இதில் பங்கேற்ற கல்பனா* (*பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி கூறும் போதுநாங்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் மதுக்கடை இருக்கு. அங்கு மது அருந்திவிட்டு எங்களைக் கேலி செய்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். வேண்டுமென்றே மாணவிகள் மீது வண்டியை மோதிவிட்டுச் செல்கிறார்கள். அதனால் எங்கள் பெற்றோர் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறுகிறார்கள்என்றார்.

சமூகக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சியாம் சுந்தர் குழந்தைகள பாதுகாப்பு தொடர்பாகக் கூறும்போதுகடைக் கோடியில் வாழும் விளிம்பு நிலைச் சமூகத்தைச் சார்நத குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட பல சவால்களை எதிர் கொள்கின்றனர். குழந்தைகள் சட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்தக் கோரவில்லை மாறாக ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்புஎன்ற வழிகாட்டுதலில் வகுக்கப்பட்டுள்ள அனைத்து சாரம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர்என்றார்.

மேலும், குழந்தைகள் சிற்றூர் அளவிலான குழந்தைப் பாதுகாப்புக் குழு, பள்ளிகளில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்புக் கல்வி, கிராமங்கள் தோறும் பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம், குழந்தைகள் புகார் அளிப்பதற்கான வெளி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்புகள் வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைக்கின்றனர்

ராஜகுமாரி அவர்கள் கூறும்போது, “குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பல சட்டங்களும் விதி முறைகளும் உருவாக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளைவிட அவற்றுக்கு தண்டனை வழங்குவதற்கே அதிக அழுத்தம் தரப்படுகிறது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த அணுகு முறை தேவை என்பதை குழந்தைகளின் அனுபவப் பகிர்வு வெளிப்படுத்துகிறதுஎன்றார்

For more information please contact:

Nazia Erum
Email: [email protected]
Phone: 9606187741