புறக்கணிக்கப்பட்ட முன்னணி வீரர்கள்

Amnesty International India
1 May 2020 8:13 pm

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி சமத்துவம் பேண, அரசின் கவனத்தைக் கோரும் இந்திய தூய்மைப் பணியாளர்கள்

இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று (COVID 19) மனித வாழ்வில், ஒரு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.  முறையான நலவாழ்வு திட்டங்கள் இல்லாத நிலையில், இச் சூழலைச் சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் இத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதத்தில் அரசு முன்னெடுத்துவரும் ஊரடங்கு நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு  உள்ளாக்கியிருப்பதோடு, நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையவும்  செய்துள்ளன.

இந்நெருக்கடியான சூழலில்,  கரோனா தொற்று பரவல் ஏற்படுத்தி வரும் பாதிப்புக்களைத் தடுக்கும் விதத்திலான பணிகளில், ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் ஏனையப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் அங்கமான தூய்மைப் பணியாளர்கள், தமது பங்கிற்கு, கரோனா தொற்று பாதித்த இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, மருத்தவமணைகளைப் பராமரிப்பது, நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்துவது, போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய ஆபத்தான சூழலிலும், தன்னலம் கருதாமல் பணி செய்துவரும் தூய்மைப் பணியாளர்களது, ‘அடிப்படை உரிமைகள் பாதுகாக்கபடுகின்றதா?’ ‘நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள, முறையான பர்துகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளனவா?அவர்களின் இன்றைய சவால்கள் என்ன?’  போன்ற கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன. இக் கேள்விகளின் பின்னணியில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஸ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் சிலரோடும் மற்றும் அவர்களது உரிமைகளுக்கெனப் பணியாற்றும் தன்னார்வ அமைப்பினர் சிலரோடும் கலந்துரையாடல் செய்யப்பட்டது. அக் கலந்துரையாடலில் வெளிப்பட்ட கருத்துக்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

“நாங்கள் தலித்துகள் என்பதால் எங்களது நலன் மற்றும் எங்களது சுகாதாரம் ஆகியவை குறித்து யாரும் அக்கறைப் படுவது இல்லை. எங்களை யாரும் மனித மாண்போடு நடத்துவதும் இல்லை. இது காலம் காலமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாகுபாடு. தற்போதைய உலகத்தொற்று காலத்திலும், இப்பாகுபாடு தொடர்கிறது. குப்பைக் கழிவுகளை நாங்கள் ஏன் எங்களது கைகளால் அள்ள வேண்டும்? முகக்கவசம், கையுறை, மூடுகாலணி, மழைச்சட்டை, ஆகியவற்றிற்காக, நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் தற்போதைய ஆபத்தான சூழலிலும், நாங்கள் அவற்றிற்காகப் போராட வேண்டி இருக்கிறது. மருத்துவ கழிவுகளை அகற்றுவது கரோனா நோயாளிகளைக் கவனிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள எங்களைப் பாதுகாப்பு காரணிகளுக்காக போராட வைப்பது நியாயமா?” என்கிறார்  மும்பையை  சேர்ந்த தூய்மை பணியாளர்.

இந்தியாவில் 50 லட்சம் தூய்மை பணியார்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  அவர்கள் பெரும்பாலும் இரண்டு விதமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சபாய் கரம்சாரிகள் (Safai Karamcharis) எனப்படுவோர், பெரும்பாலும் தெருக்களை சுத்தம் செய்வது குப்பை எடுப்பது போன்ற பணிகளைச் செய்கின்றனர். மற்றொரு சாரார் (Manual Scavengers)  சாக்கடை மற்றும் மலச்குழிகளை சுத்தம் செய்யும் பணிகளைச் செய்கின்றனர். இந்த இரண்டுவிதமான பணிகளில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தை சார்ந்;தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும், தொற்றால் பாதிப்படைந்தோரைக்  குணப்படுத்தும் முயற்சிகளிலும், மருத்துவர்கள் செவிலியர்கள மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்றே, பொது இடங்களிலும், மருத்துவமனைகளிலும் தூய்மை பேணல், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள், வைரஸ் தொற்று நோயாளிகளைப் பராமரித்தல், போன்ற பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொது நல நோக்குடன், மேற்கூறிய பல் வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னணிப் பணியாளர்கள் அனைவரும், போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள் என்பது மறுக்கப்பட முடியாத எதார்த்தம். அது ஒருபுறம் இருக்க, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களுக்குள் இருக்கின்ற ஒரு வித்தியாசம், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதாவது, மருத்துவர்கள்,   செவிலியர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் பலதரப்பட்ட சாதியச் சமூகங்களைச் சார்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில்தூய்மைப் பணியாளர்களாகிய நாங்கள் அனைவருமே, தலித் சமூகத்தை மட்டுமே சார்ந்தவர்களாக இருக்கின்றோம். காரணம், உயர்த்தி கொண்ட சாதியைச் சார்ந்த யாரும் நாங்கள் செய்யும் குப்பை மற்றும்  மலம் அள்ளும் பணியைச் செய்ய முன்வருவது இல்லை.  அதனால் தானோ என்னவோ, எங்களுக்கு, எங்கள் பணித் தளங்களில், எந்தவித வசதிகளோ பாதுகாப்போ செய்து கொடுக்கப்படுவது இல்லை. அசுத்தமான வேலைகளைச் செய்தே வாழந்து, அதிலேயே மடிகின்றோம். எங்களுக்காகக் குரல் கொடுக்க யாருமில்லை.”

               தாடாராவ் பட்டிகர் தூய்மை பணியாளர் மற்றும் துணைத்தலைவர் கச்ரா வக்டூக் சராமிக் சங் (KVSS), மும்பை.

கரோனா தொற்று காலங்களில், நகரங்களையும் மருத்துவமணைகளையும் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,  பொதுமக்கள் அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சூழலில், மருத்துவர்கள் செவிலியர்கள் மக்கள் நல பணியாளர்கள் காவல்துறையினர், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஆகிய அனைத்து பொது நலப்பணியாளர்களும், பல்வேறு பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளர். மேற்கூறிய  முன்னனிப் பணியாளர்களில், மிகவும் பிற்படுத்தபட்ட நிலையில் இருப்பவர்கள்; தூய்மைப் பணியாளர்கள்.

மருத்துவமணைகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கரோனா தொற்று நோயாளிகளைப் பராமரிக்கும் போதும்,  வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்ட்டுள்ள நோயாளிகள் வாழும் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்துக் குப்பைகளை அகற்றும் போதும், நோய் தொற்றின் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

தூய்மைப் பணியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே, நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். ஏனையோர், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று, மிகக்குறைந்த ஊதியத்துடன் பணி செய்து வருகின்றனர். இத்தகையோரோடு பணிபுரியும் அமைப்பினரது கூற்றுப்படி, நகர்ப்புறங்களில் பணி புரியும் துப்புரவுத் தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர்  கிராமங்களில் இருந்து பிழைப்பு தேடிப் புலம் பெயர்ந்தவர்கள்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களோடு பணியாற்றும் தன்னார்வ அமைப்பினரின் பகிர்விலிருந்து தெரிவது:

 • தூய்மைப்பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. முகக்கவசம், கையறை, மூடு காலனி, மேலாடை, தலைக்கவசம், சோப்பு, சுத்திகரிப்புத் திரவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலான நகராட்சிகளில் வழங்கப்படவில்லை. பொது இடங்களில் கிருமிநாசினி ஒழிப்புப் பணி குறித்த மத்திய அரகல் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டறிக்கை, அப்பணியில் ஈடுபடுவோர், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது பல இடங்களில், நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் எதார்த்தம்.
 • உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றம் மருத்துவ வசதிகள் அனைத்து பணியாளர்களுக்கும் சீhரக உறுதி செய்யப்படவில்லை.
 • ஊதிய பாகுபாடு: நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியில் இருப்போருக்கிடையேயான ஊதிய பாகுபாடு இக்காலக்கட்டத்திலும் தொடர்கிறது. மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கான ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை அனைத்துத் தரப்பினருக்கும், சீரான முறையில் வழங்கப்படவில்லை
 • அதிக வேலைப் பளு. ஆனால் அதற்கான உரிய ஊதியம் சீரான முறையில் வழங்கப்படவில்லை.
 • பணியிடங்களைச் சென்றடைவதற்கு, முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
 • நாள் கூலிக்கு மலம் அள்ளும் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் வேலை செய்வோர், தற்பொழுது வேலையின்றித் தவிக்கின்றனர்.

வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கோரி, சமூகப் போராளி கமன் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 15 ந்தேதி அம் மனுவிற்குப் பதில் அளித்த மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி, அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால் தூய்மை பணியாளர்களின் அனுபவம் அதற்கு எதிர்மறையானதாக உள்ளது.

மும்பை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், சுழற்சி முறையில், ஒரு நாள் விட்டு ஒருநாள், பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பணிக்கு செல்லும் நாட்களில் அவர்களது உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்காகக் கூடுதலாக ரூபாய் 300 வழங்கப்படுகிறது. இருப்பினும், பணிக்கு வர அறிவுறுத்தப்படாத நாட்களில், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என்பது  குறித்து எந்தத் தகவலும் பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை” என்கிறார் பாபுராவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகிறார். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பலர் சமூகப் பாதுகாப்பற்ற நிலையில், குறைந்த ஊதியத்துடன் பணி செய்யும் நிலை பல மாநிலங்களில் நிலவுகிறது.

மும்பை, செம்பூர் பகுதி மருத்தவமனைகளில், நோயாளிகளைக் கவனிக்கும் பணியில் அமர்த்தப்பட்;டுள்ள பாபுராவ் கூறுவது : “ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு உபகரணங்களைச் சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தி கொள்ளும்படி தொடக்கத்தில் நிர்ப்பந்தித்தார்கள். அத்தகைய பாதுகாப்பற்ற நிலையில் எங்களால் பணிசெய்ய இயலாது என்று நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான், எங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுத்தார்கள்”

மாநில நகராட்சிகள் நிர்வாகத் துறையின் ((Department of Municipal Administration-DMA)  வழிகாட்டுதலின்படி, வழங்க வேண்டிய பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குமாறு கோரிய ஒரு தூய்மைப் பணியாளருக்குப் பதிலளித்த கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள பவகடா நகராட்சி “ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

‘தம்மட்ட” (Thamate) அமைப்பின் நிறுவனச் செயலரும் ‘சபாய் கரம்சாரி காவுலு சமிதி’ அமைப்பின் மாநில அமைப்பாளருமான முனைவர். மு.பி. ஒபலேஷா அவர்கள் கூறும்போது,கர்நாடாகாவில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் யாரும், மாநில தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் மருத்துவமனைகள் வாயிலாக, எவ்விதமான மருத்துவப் பலன்களையும் அடையவில்லை. ‘தொழிலாளர் சுயநிதி சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்” ஒரு பகுதியான இத் திட்டத்தின் பலன்களை தூய்மைப் பணியாளர்கள் அடைய முடியாததற்கான காரணம், உள்ளாட்சி நிர்வாகங்கள், தொழிலாளி மற்றும் தொழில் அளிப்பவரது பங்களிப்புத் தொகையினைத் தொழிலாளர் ஈட்டுறுதி கணக்கில் முறையாக பற்று வைக்காததே ஆகும். எனவே தொழிலாளர்கள் யாருக்கும் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மாநில தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் பதிவு அட்டை கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக, கோவிட்-19 தொற்று பரவிவரும் இச்சூழலிலும்  தூய்மைத் தொழிலாளர்கள் ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற இயலாத நிலை உள்ளது’ என்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் பலர் பல்வேறு வகையான கழிவுகளை அகற்றும் பணிகளில் (கழிவு நீர் அடைப்பு, செப்டிக் டேங் தூய்மைப்படுத்தல் மற்றும் பிற…) ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக தற்போது அவர்கள் எவ்வித வேலைக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோனோர்  இடம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளதால், அவர்களிடம் ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. இதன் காரணமாக, அவர்களால் கர்நாடக அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளையும் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்கிறார் முனைவர் ஒபலிஷா.

தமிழ்நாட்டில் மதுரை அருகே உள்ள பாலமேடு பகுதியில் உள்ள பணியாளர்கள் சிலர் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் இந்தியாவிடம் கூறும்போது, கிருமி நாசினி தெளிப்பு பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் மறுக்கப்பட்டதாகவும், நாகர்கோவில் மாநகராட்சி தனது பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியுள்ளதை ஆதாரமாகக் காட்டிய பிறகுதான் தங்களுக்குப் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணத் தொகுப்புக்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், தாங்கள் தற்போதைய கரோனா சூழலில், விடுமுறையின்றி வாரத்தின் ஏழு நாட்களும் வேலை செய்வதாகவும்,  சராசரியாக தினமும் 2 மணி நேரம் கூடுதலாக வேலை செய்வதாகவும் தெரிவித்தனர்.

பெண் தொழிலாளர்கள் குறிப்பாக விளிம்புநிலையினர்:

நகர்புற தூய்மைப் பணியாளர்களில் 50 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் நகரங்களில் உள்ள திடக் கழிவுகளை சேகரித்தல், சாலைகளைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் பள்ளி கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர். கோவிட்-19க்கு முன்பிருந்தே பெண்கள், தொழில்சார்ந்த பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்; அவற்றில் சில: உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை, பாதுகாப்பற்ற பணிச் சூழல், போதுமான பாதுகாப்பு உடை, உபகரணங்களின்மை, நகர்புற பகுதிகளில் போதிய கழிப்பறை வசதியின்மை, உரிய நேரத்தில் கழிப்பிடங்களுக்குச் செல்ல இயலாததால் ஏற்படக் கூடிய உடல்நலப் பிரச்சனைகள், மகப்பேறு காலகட்டத்தில் ஊதியம் வழங்காமை மற்றும் பிற.  தற்போதைய கொரோனா தொற்று சூழலில், தாங்கள் பல புதிய பிரச்சினைகளையும் சேர்த்து அனுபவித்து வருகின்றனர். அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை, 1) பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் புதிய இடங்களில் பணி செய்ய பணிக்கப்பட்டுள்ள பெண்கள், நீண்ட தூரம் நடந்தே சென்று பணி செய்து வீடு திரும்ப வேண்டியுள்ளது. 2) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகவும் வேண்டியுள்ளது (தமிழ்நாட்டில் மதுரை அருகே சில பெண் பணியாளர்கள் பகிர்ந்து கொண்டபோது; இப்பிரச்சனைகள் குறித்துப் பேசினர். மேலும், தாங்கள் இப் பிரச்சினை குறித்து உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறினர்), 3) அண்டை வீட்டார் வலுக்கட்டாயமாக தங்களிடமிருந்து விலகிக் கொள்வது ஃ தங்களைத் தவிர்ப்பது, 4) குழந்தைகளைப் பெரியவர்களின் கண்காணிப்பின்றி வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது, 5) தங்களது குழந்தைகள் இத் தொற்றுக்கு ஆளாவதற்குத் தாங்களே காரணமாகிவிடுவோமா என்ற பயம் முதலியன.

பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாகுபாடு நிலவுவதைச் சுட்டிக் காட்டிய  உமா அய்டியாஸ் (Institute of Development Education Action and Studies) அமைப்பு “கிரிமி நாசினி தெளிப்புப் பணிகளுக்கென கூடுதல் ஊதியம் வழங்கும் ஒரு சில ஊராட்சி அமைப்புகளும், பெண்களுக்குப் பாரபட்சமான வகையில்  ஊதியம் வழங்குகின்றன .. நாள் ஒன்றுக்கு பெண்களுக்கு ரூபாய் 250 யும், அதே வேலை செய்யும் ஆண்களுக்கு ரூபாய் 500 யும் வழங்குகின்றன.”என்றார்

எளிதாக சுரண்டலுக்குள்ளாகுதல்:

ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது சவால்கள் நிறைந்த செயல். கச்ரா வக்டூக் சராமிக் சங் (KVSS) அமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் மிலின்ட் ரனடே அவர்கள் கூறும்போது “கடந்த இருபது ஆண்டுகளாக ஒப்பந்த பணிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, நிலையாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களது ‘தலித்’ மற்றும் ‘புலம் பெயர்ந்தோர்’எனும் அடையாளங்களே, அவர்களை அதிகச் சுரண்டலுக்கான சூழலுக்குத் தள்ளுகின்றன.”

பல ஆண்டுகாலப் போராட்டங்கள் மற்றும் அமைப்பாக திரட்டப் பட்டதன் காரணமாக KVSSஅமைப்பில் இணைந்துள்ள 6,500 ஒப்பந்த தொழிலாளர்களால் குறைந்தப்பட்ச ஊதியத்தை பெற முடிந்தது.” என்று ததாராவ் பதேகார் அவர்கள் கூறுகிறார்.

உலக வங்கி, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, வாட்டர் எய்ட் மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் அறிக்கையின்படி நிரந்தர தொழிலாளர்களுக்குச் சட்டங்களின் வாயிலாக, குறைந்தபட்ச அடிப்படை பணிச் சூழல் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துணை ஒப்பந்தங்கள் வாயிலாக பொருத்தமற்ற பணிகளைச் செய்யும் முறைசாரா தொழிலாளர்கள் – ஒப்பந்த மற்றும் தினக் கூலிகள், ஆபத்தான சட்டப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையில் ஆராய்ந்தால், தினக் கூலித் தொழிலாளர்கள் பெறும் ஊதியம். நிரந்தர பணியாளர்கள் பெறும் ஊதியத்தை விட மூன்று மடங்கு குறைவாக உள்ளது. பல அடுக்கு துணை ஒப்பந்த முறையானது, ஒப்பந்த மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களின் குரலை ஒடுக்குகிறது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் ரனடே, ‘வியாபாரத்தை எளிதாக்குதல் என்பது, சுரண்டலை எளிதாக்குதல் என்பதே’ என்கிறார்.

கோவிட்-19 தொடர்பான மரணங்கள் ஏற்படும் போது காப்பீடு குறித்த அரசின் பதில்:

மார்ச் 26-ஆம் தேதி அன்று மத்திய அரசு முதற்கட்ட தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்திய போது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பை அறிவித்தது. அத்தொகுப்பின்படி மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபடுவோருக்கு கோவிட்-19 தொற்று காரணமாக மரணங்கள் நிகழ்ந்தால் அதற்கு காப்பீடு 50 இலட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவமனைகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களும் உள்ளடக்கம். ஆனால் இத்திட்டம் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் பொருந்துமா என்பது தெளிவாக இல்லை. அதுமட்டுமல்லாமல் பெரு, சிறு நகரங்களில் திடக் கழிவுகளை சேகரிப்பவர்கள், குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றுவோர் இத்திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.

மார்ச் 24 அன்று,  தமிழ்நாடு அரசு, கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் முன்னணி மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என, முதல் மாநிலமாக அறிவித்தது. ஏப்ரல் 2 அன்று தில்லி அரசு, கோவிட்-19 தொற்று  காரணமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மரணமடைய நேரிட்டால்,  அவர்களுக்கு 1 கோடி ஆயுள் காப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்தது.

ஏப்ரல் 4 அன்று பஞ்சாப் மாநில அரசு, காவல் துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 50 இலட்சத்திற்கான சிறப்பு காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. மும்பை பெருமாநகராட்சி (ஆஊபுஆ) தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்கள் யாரேனும், கோவிட்-19 தொற்று காரணமாக மரணமடைய நேரிட்டால், 10 இலட்சம் இழப்பீடாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. இவ்விழப்பீடு மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பில் வராது என்றும் அறிவித்தது.

அரசு உடனடியாக செய்ய வேண்டியது என்ன

பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில், “அனைத்து தொழிலாளர்களும் சிறந்ததொரு, நியாயமான பணிச் சூழலில் பணியாற்றுவது அடிப்படை உரிமையாகும்.” இவ்வுடன்படிக்கையை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.  நியாயமான கூலிக்கான உரிமை, சம அளவுள்ள வேலைக்கு சமமான ஊதியம், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பணிச் சூழல், ஏற்றுக் கொள்ளத்தக்க அளவிலான பணி நேரம், ஊழியர்களின் மகப்பேறு காலம் மற்றும் மகப்பேறுக்கு பிந்திய காலப் பாதுகாப்பு மற்றும் பணியாளர்கள் அனைவரையும் சமமாக நடத்துதல் ஆகியன அதன் உள்ளடக்கமாகும்.

தூய்மைப் பணியாளர்களின் அளப்பரிய பணிகளை மத்திய மாநில அரசுகள் அங்கீகரிப்பதுடன் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும்.

 • தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் அத்தியாவசிய, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்பவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அனைவருக்கும் எந்த பாகுபாடின்றி – நல்ல, தரமான, போதிய எண்ணிக்கையிலான பாதுகாப்பு உடைகள் (PPE) வழங்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும்.
 • முறையான மற்றும் தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
 • கோவிட்-19 தொடர்பாக பணிச் செய்யும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும், அவர்கள் பிரிவைச் சார்ந்தவராயினும், அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்.
 • பணியிடங்களில் பெண் தொழிலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள், பாகுபாடுகள், மற்றும் பிற வடிவிலான வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதை உறுதிச் செய்திடல் வேண்டும்.
 • ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பணிகளைத் தொடர்ந்து செய்யும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, போதிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பினை, அரசு வழங்கிட வேண்டும்.
 • தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களில், தங்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, சுகாதார வசதிகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் கிடைக்கப் பெறவும், தொற்றுப் பரவலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறுதி அளிக்கப்பட வேண்டும்.
 • தூய்மைப் பணியாளர்கள் தாங்கள் பணி செய்யும் இடங்களுக்குத் தடையின்றிச் சென்றுவர, தேவையான பொதுப் போக்குவரத்து வசதிகளை உறுதிச் செய்திட வேண்டும்.
 • தூய்மைப் பணியாளர்கள் வார ஓய்வு பெறுதலை உத்திரவாதப்படுத்துதலும், அந் நாட்களில் ஏற்படும் பணியாளர்கள் பற்றாக்குறையைக் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளுதலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
 • தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே உள்ள தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் வாயிலாக மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.
 • நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
 • தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதை உறுதிச் செய்திட வேண்டும். மேலும் அவர்களுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும். மருத்துவ வசதிகளைப் பெறுவதில் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது.

இந்த கரோனா தொற்று, நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது.  ஒரு சமூகமாக நாம் செய்யத் தவறிய முக்கிய பணிகளை சுட்டி காட்டியிருப்தோடு மட்டுமல்லாமல், எதை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பது குறித்துச் சிந்தித்துச் செயல்படுவதற்கான ஒரு சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. ‘கரோனா வைரஸ் பரவல் இருக்கின்றதோ இல்லையோ, தூய்மை பணியாளர்கள் தாங்கள் செய்கின்ற வேலையை நிறுத்திவிட்டால் நகரங்களில் குப்பை கிடங்குகள் பெருகும்;;, நாற்றம் எடுக்கும்;, பல்வேறு நோய்கள் பரவும். நகரங்களையும் மருத்துவமணைகளையும் தூய்மைப்படுத்தும் எங்களது பணி பலரது கண்களுக்கு புலப்படுவது இல்லை. இந்த வேலை நாங்கள் விரும்பி எடுத்த ஒன்றல்ல. இது வரலாற்று ரீதியாக எங்கள் மீது திணிக்கப்பட்ட சமூக அநீதி. கரோனா தொற்று கடந்த பின்னரும் எங்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிறார் தடாராவ் பட்டீக்கா.

தூய்மை பணியார்களின் உரிமைகள் காலங்காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளன.  சாதியக்கட்டமைப்பில் வேருன்றியுள்ள நம் சமூகம், அவர்களது நிலை, மற்றும் உரிமைகளைப் பற்றி  பேசுவதும் இல்லை. மதிப்பதும் இல்லை. இது முறையன்று. கரோனா தொற்று காலத்திலும் சரி, அது கடந்த பின்னரும் சரி, தூய்மை  பணியார்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது நியாமான கோரிக்கைளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியது இச்சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் கடமை.   பணித்தளங்களில் உரிய பாதுகாப்பும், மனித மாண்போடு கூடிய பாகுபாடற்ற சமத்துவ அங்கீகாரமும் தூய்மை பணியாளர்களின் அடிப்படை உரிமைகள்

ரீனா டீட்டே மற்றும் மை. இராசகுமாரி

ரீனா டீட்டே ஆம்னெஸ்டி இந்திய அமைப்பின் பாலினம் மற்றும் அனைத்து பாகுபாட்டிற்கெதிரான செயல்பாடுகளையும்  இராசகுமாரி மனித உரிமைக் கல்வி செயல்பாடுகளையும் வழிநடத்தி செல்கின்றனர்.

கலந்துரையாடலில் பங்கேற்று தூய்மைப்பணியாளர் நிலை குறித்து பகிர்ந்து கொண்டு அமைப்புகள்:

Action Initiative for Development (AID),
Institute of Development Education, Action and Studies (IDEAS),
Kachra Vahtuk Shramik Sangh (KVSS),
Thamate (Centre for Rural Empowerment) and
WAYVE Foundation.